×

பதிவாளரை பணி நீக்கம் கோரி வழக்கு வக்கீலுக்கு ஒரு மாத சிறை ஓராண்டு பணி செய்ய தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக இருந்த பூர்ணிமா, மேல்நிலை வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பும் பின்னர் மைசூருவில் சட்ட படிப்பும் முடித்து, நீதித்துறை பணியில் சேர்ந்திருப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய கோரியும் வழக்கறிஞர் சதீஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு விசாரணையின்போது, பதிவாளர் பூர்ணிமா பள்ளி படிப்பை உரிய முறையில் முடித்துள்ளதற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம்,  நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி சதீஷ்குமாருக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற சிறப்பு பணி அதிகாரி கணபதிசாமி மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது.  இதற்கிடையில், வழக்கறிஞர் சதீஷ்குமார், தனது மூத்த வழக்கறிஞர் வாசுதேவன் அறிவுறுத்தலின் படியே வழக்கு தொடர்ந்ததாக பதில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கணபதிசாமி மற்றும் நாகஜோதி ஆகியோர் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு வருமாறு:  பதிவாளர் பூர்ணிமாவுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதித்துறை நீதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நீதித்துறையை சாராதவர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறையில் இருப்பவர்களும், இந்நீதிமன்றத்தின் மீது கல் எறிந்து இருப்பது வேதனையளிக்கிறது. வழக்கறிஞர்கள் சதீஷ்குமார் மற்றும் வாசுதேவன் இருவரும் நீதிமன்ற அவமதிப்பு  குற்றம் புரிந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. நடந்த சம்பவத்துக்கு சதீஷ்குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். எனவே, அவருக்கு ₹6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் மீண்டும் வழக்கறிஞராக பணிபுரிய அனுமதி தரப்படுகிறது. அதே நேரத்தில் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத வாசுதேவனுக்கு 1 மாத சிறை தண்டனை மற்றும் ₹6 ஆயிரம் அபராதம் விதித்தும், ஓராண்டு வழக்கறிஞர் பணிபுரிய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

The post பதிவாளரை பணி நீக்கம் கோரி வழக்கு வக்கீலுக்கு ஒரு மாத சிறை ஓராண்டு பணி செய்ய தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Purnima ,Madras High Court ,Open University ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...